பயணப்பொதியில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல் : 10 ஆண்டுகளின் பின் குற்றவாளிக்கு மரண தண்டனை
கொழும்பில் பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு 10 வருடங்கள் கழித்து மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு (Colombo) மேல்நீதிமன்றம் இன்று (24) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் பயணப்பொதி ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
குறித்த பயணப்பொதியில் இருந்து 2015 ஆம் ஆண்டு செட்டியார் தெருவில் உள்ள விடுதி ஒன்றில் கொலை செய்யப்பட்ட தர்மராஜா கார்த்திகா என்ற பெண்ணின் உடல் மீட்கப்பட்டிருந்து.
இந்த குற்றச் செயலை மேற்கொண்ட பெட்ரிக் கிருஸ்ணராஜா என்ற நபர் இவ்வாறு பெண்ணின் உடலை பயணப்பொதியொன்றில் சூட்சுமமாக மறைத்து பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்தில் வைத்துச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு எதிரான வழக்கு 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது.
மரண தண்டனை
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த நபருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் முன்னிலையாகியிருந்த குற்றவாளியான பெட்ரிக் கிருஸ்ணராஜா தாம் நிரபராதி என நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
எனினும் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றங்களும் எவ்வித சந்தேகங்களும் இன்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதித்து மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
