வோஷிங்டனில் தூதரகத்துக்கு முன்பாக தமக்கு தாமே தீ வைத்துக்கொண்ட நபர்
அமெரிக்காவின் வோஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்துக்கு முன்பாக நேற்றைய தினம் (25) ஒருவர் தமக்கு தாமே தீ வைத்துக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை உடனடியாக தீயை அணைத்து குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க தீயணைப்பு பிரிவினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வாகனம்
இந்த நிலையில் வோஷிங்டன் காவல்துறை, இரகசிய சேவை மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த நபர், “இராணுவ சீருடையில் காணப்படும் நான் தொடர்ந்தும் இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை“ என தெரிவிக்கும் இணைய காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.
அத்துடன் தன்மேல் எரிபொருளை ஊற்றி தனக்குதானே தீ மூட்டிக்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் சுதந்திர பலஸ்தீனம் என கோசமிட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் தூதரக அதிகாரிகளுக்கு பரீட்சயமான நபர் அல்லவென இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
ஜோர்ஜியா மாநிலத்தில்
தூதரகத்துக்கு அருகிலிருந்து கைப்பற்றப்பட்ட குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் வாகனமொன்று வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் சோதனையிடப்பட்டுள்ளது.
எனினும் அதிலிருந்து ஆபத்தான பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தூதரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் முன்பாகவும் நபரொருவர் இவ்வாறு தமக்கு தாமே தீயிட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |