மனம்பேரி தொடர்பில் ராஜபக்சர்களின் சகா வெளியிட்ட தகவல்
சம்பத் மனம்பேரி தனது இணைப்புச் செயலாளர் அல்ல என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான மனம்பேரி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இணைப்பு செயலாளராக பணியாற்றியுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள ஜோன்ஸ்டன், இதுபோன்ற தவறான அறிக்கைகள் மற்றும் அவதூறுகளை வெளியிடும் குழுவிற்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
மனம்பேரி தொடர்பான கூற்று
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில், கட்சியின் உறுப்பினர்களிடம் உரையாற்றும் போதே அவர் இவற்றை தெரிவித்துள்ளார்.
அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட ஜோன்ஸ்டன், "இப்போது என்னுடைய ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவர் மனம்பேரி என்று சொல்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள். நான் இந்த மாவட்டத்திலிருந்து மட்டுமே ஒருங்கிணைப்புச் செயலாளர்களை நியமித்தேன்.
அவர்கள் எங்கிருந்தும் தாக்க முயற்சிக்கிறார்கள். எங்களுக்கு இன்னும் சட்டத்தின் மீது வலுவான நம்பிக்கை உள்ளது. எனவே, எல்லா நேரங்களிலும் சட்டத்தின் கீழ் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
