மண்டைதீவு புதைகுழி சூத்திரதாரிக்கு அராலிப் பகுதியில் வழங்கப்பட்ட தண்டனை
யாழ். மண்டை தீவு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் மனித எலும்பு கூடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மூலம் வழங்கப்படும் நீதி அரச நீதியாக அமையுமே அல்லாமல் தூய நீதியாக அமையாது என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மண்டைதீவு புதைகுழி என நம்பப்படும் கிணறு
அவர் மேலும் தெரிவிக்கையில், மண்டைதீவு புதைகுழி என நம்பப்படும் கிணற்றின் மீது கட்டு கட்டி நினைவு சின்னம் ஒன்று வைக்கப்பட்டது அது பின்னர் உடைக்கப்பட்டது.
கேள்வி என்னவெனில் குறித்த தூபி கட்டப்பட்டு ஓராண்டு காலப் பகுதியில் தமிழ் தரப்பை கட்டுப்படுத்திய தரப்பு ஏன் அதனை தோண்டி விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அல்லது குறித்த கிணற்றை தோண்டுவதற்கு ஏன் பெரிதும் அக்கறை காட்டவில்லை. தற்போது அது தொடர்பில் வழக்கு போடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயம்.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பதிலடி
அரசியலை அறிவியலாக பார்க்கும் போது 2009க்கு முன்னர் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக பதிலடி கொடுப்பதுதான் போராட்ட வடிவமாக காணப்பட்டது.
தமது மக்களை இன அழிப்பு செய்தவர்களை தண்டித்தார்கள். தண்டிக்கும் சக்தி அவர்களிடம் இருந்த நிலையில் மண்டைதீவு கிணற்று புதைகுழி தொடர்பில் சம்பந்தப்பட்டவரை அராலிப் பகுதியில் வைத்து தண்டனை வழங்கினார்கள்.
அன்றைய காலப் பகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கு இலங்கைக்குள்ளோ அல்லது சர்வதேச நீதிகளோ விசாரணைகள் தேவைப்படவில்லை. அவர்களே அதனை நிறைவேற்றினார்கள்.
அன்றைய தமிழ் மக்களின் போராட்ட வடிவம் அவலங்களை தந்தவர்களுக்கு அதையே திருப்பிக் கொடுப்பதாக இருந்தது. தண்டனை வழங்குவதை விட தண்டனை வழங்கும் பொறுப்பை அவர்களே எடுத்துக் கொண்டார்கள்.
2009க்கு பின்னர் எமக்கு எதிராக அநீதி இழைக்கிறவர்களுக்கு தண்டனை வழங்கும் சக்தி குறைந்தவர்களாகவும், போராட்ட பலம் குறைந்தவர்களாகவும் காணப்பட்டனர்.
தனியாக அல்லது சிறு குழுவாக போராட வேண்டிய நிர்ப்பந்தம்
தற்போது தமிழ் மக்கள் தமக்கு அநீதி இழைக்கப்படும் போது தனியாக அல்லது சிறு குழுவாக போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதற்கு பல உதாரணங்களை கூற முடியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது உறவுகளை தேடி தாய் தந்தை சகோதரர்கள் தனியாகப் போராடி வருகிறார்கள். இந்தியாவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட பேரறிவாளனின் விடுதலைக்காக தாய் அற்புதம்பாள் பல வருடங்களாக தனியாகப் போராட்டத்தை மேற்கொண்டார்.
ஆகவே ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் தமக்கான நீதியை பெற்றுக் கொள்ளும் இடமாக இலங்கை அரசாங்கத்தை நம்ப முடியாது. அவ்வாறு வழங்கப்படும் நீதி தூய நீதியாக இருக்க மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
