கொழும்பில் குண்டு வைக்கப்பட்டதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சி
கொழும்பு - பொரள்ளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு வைக்கப்பட்டதன் பின்னணியில் பாரிய சூழ்ச்சி காணப்படுவதாகவே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கருதுவதாக, பேராயர் இல்லத்தின் தகவல் தொடர்பு மையத்தின் பணிப்பாளர் ஜுட் கிரிசாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னால் உள்ள உண்மைகளை மறைப்பதற்கு முயற்சிக்கும் ஒரு செயற்பாடாகவே பேராயர் இல்லம் இதனைப் பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொரளை சகல புனிதர்கள் தேவாலயத்தில் குண்டு மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முனி என்ற நபரை பார்வையிடுவதற்காக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
பேராயர் உட்பட அருட்தந்தையர்கள் பலரும் குற்றத்தடுப்பு பிரிவிற்கு விஜயம் செய்த போது, அவ் வளாகத்தில் அதிகளவான காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குறித்த நபரை பார்வையிட்டு வெளியேறிய கர்தினால் ஊடகங்களுக்கு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை,
எவ்வாறிருப்பினும் பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
