இந்தியாவில் உக்கிரமடையும் மணிப்பூர் கலவரம் - கண்டு கொள்ளாத பிரதமர் மோடி
இந்தியாவின் மணிப்பூரில் இடம்பெற்று வரும் கலவரம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங்கின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 40 நாட்களாக நீடித்துவரும் வன்முறை சம்பவங்களில் இதுவரை 100 பேர்கள் வரையில் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது திட்டமிட்ட இன அழிப்பு என்றே சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த சம்பவங்களில் இதுவரை முறையான எந்த நடவடிக்கையும் இந்திய அரசால் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கண்டு கொள்ளாத மோடி அரசு

கடந்த 40 நாட்களில் ஒருமுறை கூட பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை என்பதுடன், உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டவில்லை.
மட்டுமின்றி, மணிப்பூரில் ஆளும் பாஜக அரசால் இந்த மோதல்களை கட்டுக்குள் கொண்டுவரவும் முடியவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது 10,000க்கும் அதிகமான அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர், 500க்கும் அதிகமான பி.எஸ்.எப்.வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் பாதுகாப்பு படையினரிடம் இருந்து ஆயுதங்களை கொள்ளையடித்து வன்முறைகளில் ஈடுபடுவதால் நிலைமை மிக மிக மோசமடைந்துள்ளது.
மைத்தேயி, குக்கி ஆகிய இரு இனக்குழுக்களும் ஆயுதங்கள் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் ஏராளமானோர் மரணமடைந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த வாரம் மணிப்பூர் பெண் அமைச்சர் நெம்சா கிப்ஜென் என்பவரது வீடு வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. மைத்தேயி இனக்குழுவினரே இந்த வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தலைநகர் இம்பாலில் மத்திய அமைச்சர் ஆர்.கே ரஞ்சன் சிங் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 100 பேர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ள தகவல் வெளியாகியும், 40 நாட்களாக வன்முறை சம்பவங்கள் நீடித்துவரும் நிலையில் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.