மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மன்னார் (Mannar) நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தின் முன் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் உயிரிழந்ததுடன், பெண் உட்பட மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவல்துறையினர் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (23) மேலும் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சம்பவத்திற்கு உதவிய கடற்றொழிலாளி
இந்த நிலையில் மன்னாரைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளி இந்தக் கொலை சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் இராணுவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |