மன்னாரை உலுக்கிய துப்பாக்கிச் சூடு : அதிரடியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்
மன்னார் (Mannar) நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (26.04.2025) இடம்பெற்றுள்ளது.
மன்னார் காவல்துறை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் மன்னார் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட 2ஆவது மைல்கல் பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மன்னார் கொட்டவெளி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவரை சுட்டுக்கொலை செய்த பிரதான சந்தேக நபர்களுக்கு தப்பிச் செல்வதற்கு உதவி செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
