வெளிநபரால் அபரிக்கப்படவுள்ள காணி- அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
மன்னார் - மருதமடு கிராமத்திற்கு சொந்தமான காணியை கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மருதமடு கிராமத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க வெளிநபர் ஒருவர் முயற்சித்த நிலையிலேயே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு கிராமத்திற்கு சொந்தமான 14.5 ஏக்கர் அரச காணியை தனி நபர் ஒருவர் அபகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இந்த விடயம் தொடர்பாக முசலி பிரதேச செயலாளருடன் கலந்துரையாடினார்.
அத்துடன், மருதமடு கிராமத்தில் காணியற்ற மக்களுக்கு உடனடியாக இந்த காணிகளை பகிர்ந்தளிக்குமாறும் முசலி பிரதேச செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்துள்ளார்.