மன்னாரில் விசேட தேடுதல் நடவடிக்கை: ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
மன்னார் நகர் பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 1472 Pregabalin போதை மாத்திரைகளுடன் 02 சந்தேக நபர்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த தேடுதல் நடவடிக்கையானது நேற்று (13) மதியம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வடமேற்கு கடற்படை கட்டளையினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் வடமத்திய கடற்படை கட்டளையில் உள்ள கஜபா மற்றும் மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் மன்னார் உப்புக்குளம் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
இந்த நடவடிக்கையில் 20 Pregabalin கேப்சூல்கள் வைத்திருந்ததற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் அதே பகுதியில் மீண்டும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போது ஒரு வீட்டில் இருந்து 1432 Pregabalin காப்ஸ்யூல்கள் மற்றும் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து அதே மருந்தின் 20 காப்ஸ்யூல்கள் உடன் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இருவர் கைது
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சிலாவத்துறை மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்கள் மருந்து மாத்திரைகள் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |