நாங்கள் நிதிக்காக போராடவில்லை நீதிக்காக போராடுகின்றோம்- உலகநாடுகளிடம் கையேந்தி கண்ணீர் சிந்தும் உறவுகள்!
அம்மாக்களின் கண்ணீரை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. ஜெனிவா பேச்சுவார்த்தையில் எமக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்தை நம்பி உயிரோடு ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளை மீட்கவே இன்று வீதியில் இறங்கி போராடுகின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், உறவுகளுக்காகவே உறவுகளாகிய நாங்கள் இன்று வீதியில் இறங்கி கண்ணீர் சிந்தி போராடி வருகிறோம்.
இதற்கு சர்வதேசம் நீதியை பெற்றுத் தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார். ஜெனிவா 48 வது அமர்வு இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் ஜெனிவாவிடம் கோரிக்கை ஒன்றை முன் வைக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஒரு தீர்வு தேவை. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அம்மாக்கள் இன்று சுமார் 1500 நாட்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். நாங்கள் வீதியில் இறங்கி எமது உறவுகளை மீட்க போராடுவது ஜெனிவாவிற்கு இல்லை உலக நாடுகளுக்கே தெரியும். நாங்கள் நீதிக்காக போராடி வருகிறோம். நிதிக்காக போராடவில்லை.
எமது பிள்ளைகளுக்காகவே போராடி வருகிறோம். உயிரோடு ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை மீட்கவே இன்று வீதியில் இறங்கி போராடுகின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், உறவுகளுக்காகவே உறவுகளாகிய நாங்கள் இன்று வீதியில் இறங்கி கண்ணீர் சிந்தி போராடி வருகின்றோம்.
இலங்கை அரசாங்கத்தை நம்பியே எமது பிள்ளைகளை நாங்கள் ஒப்படைத்தோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் பாதுகாத்து தருவோம் என இராணுவம் கூறியதன் காரணமாகவே நாங்கள் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். மன்னார் மாவட்டத்தில் முப்படையை நம்பியே நாங்கள் இருந்தோம்.
ஒன்றும் நடக்காது எமது பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி இருந்ததோம். எனது மகன் 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வீட்டில் வந்து கடற்படையினர் விசாரணைக்கு என அழைத்துச் சென்றனர். ஆனால் அழைத்துச் சென்ற எனது மகனின் நிலைப்பாடு இது வரை என்ன என்று தெரியாது. இலங்கையில் உள்ள அனைத்து கடற்படை முகாம்களுக்கும் சென்று எனது பிள்ளையை தேடினேன்.
ஆனால் இன்று வரை எனது மகனின் நிலை என்ன என்று தெரியவில்லை. நாங்கள் இறப்பதற்கு முன் எமது பிள்ளைகளின் நிலை என்ன என்று எமக்கு தெரிய வேண்டும். எமது பிள்ளைகளின் நிலை என்ன? அவர்களை எங்கே வைத்துள்ளீர்கள்?,அவர்கள் இருந்தால் அவர்களை விடுதலை செய்ய உதவுங்கள் என்று தான் நாங்கள் இன்று உலக நாடுகளிடம் கேட்கின்றோம்.
எமது பிள்ளைகளை வீதியில் நின்று தேடுகின்ற அம்மாக்களாக நாங்கள் இருக்கின்றோம். -அம்மாக்களின் கண்ணீரை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. ஜெனிவா பேச்சுவார்த்தையில் எமக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இலங்கை இராணுவத்தையோ அல்லது அரசாங்கத்தையோ நாங்கள் நம்பவில்லை. எங்களுக்கு சர்வதேசம் ஒரு நல்ல பதிலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜெனிவா 48 ஆவது அமர்வில் கோரிக்கை விடுக்கின்றோம்.
எங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். எங்களின் காலங்கள் இன்னும் அதிகம் இல்லை. நாங்கள் இறந்து விட்டோம் என்றால் சாட்சியங்கள் அழிந்து விடும். அதனையே அரசாங்கம் பார்த்துக் கொண்டு இருக்கின்றது. ஒரு அம்மா உயிருடன் இருக்கும் வரை எனது பிள்ளைகளுக்கான போராட்டம் நடந்து கொண்டு இருக்கும்.
எனவே எங்களுக்காக சர்வதேசம் ஜெனிவா பேச்சு வார்த்தையில் பேசி தீர்வை பெற்றுத் தர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.