மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : பாதுகாப்பு தரப்பினரை சாடிய செல்வம் எம்.பி
மன்னாரில் (Mannar) நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டமைக்கு பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே காரணம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ''மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். இவ்வாறான சம்பவங்களை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே இந்த நிலைமைக்கு காரணம்.
பழிவாங்கும் படலம்
இது போன்ற சம்பவங்களுக்கு நானும் இலக்காக்கப்படலாம். பழிவாங்கும் படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இதன் மூலம் தூய்மையான இலக்கை நோக்கிய இலட்சியத்தை அடைய வேண்டும்.
அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை என்ற திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.
ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும், திணைக்களங்கள் தொடர்பிலும் அவதானம் இருக்க வேண்டும். சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயற்படுகின்றனர். அவர்கள் அந்த அதிகாரத்தில் இருந்து மாற்றப்பட வேண்டும்'' என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |