மன்னார் நகரசபைக் கூட்டத்தில் வெடித்த சர்ச்சை: உறுப்பினர் பிரசாத்துக்கு ஒரு மாதத் தடை
மன்னார் நகரசபை உறுப்பினர் பிரசாத்துக்கு ஒரு மாதத் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் நகரசபையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது கருத்துத் தெரிவிக்க முற்பட்ட உறுப்பினர் பிரசாத்துக்கும் நகரசபைத் தவிசாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையை எதிர்த்தும், தனக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி உறுப்பினர் பிரசாத் வடக்கு மாகாண ஆளுநரிடம் நேரடியாக முறைப்பாட்டுக் கடிதத்தைக் கையளித்துள்ளார்.
விவாதங்கள்
கடந்த (20-10-2026) அன்று நடைபெற்ற மன்னார் நகரசபையின் 17ஆவது மாதாந்தக் கூட்டத்தின்போது சபை அனுமதி தொடர்பான விவாதத்தின் போது விவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது நகரசபையின் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்பாக உறுப்பினர் பிரசாத் கருத்துத் தெரிவிக்க முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தச் சந்தர்ப்பத்தில் தவிசாளர் குறுக்கிட்டதாகவும் முதலில் தனக்குக் கருத்துத் தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்குமாறும் தான் பேசி முடித்த பின்னர் தவிசாளர் பதிலளிக்கலாம் என்றும் உறுப்பினர் பிரசாத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், அவருக்குக் கருத்துத் தெரிவிக்க அனுமதி வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனால், தன்னைப் பேச அனுமதிக்குமாறு உறுப்பினர் மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்பட்ட முரண்பாடு
இந்த முரண்பாட்டைத் தொடர்ந்து சபைக் கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு தவிசாளர், உறுப்பினர் பிரசாத்திடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதன் பின்னர், உறுப்பினர் பிரசாத்துக்கு ஒரு மாத காலத் தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள அவர், தவிசாளரின் செயற்பாடு தொடர்பாகவும் தனது ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மாதத் தடையை எதிர்த்தும் சபைக் கூட்டத்தின்போது தனது கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமை தொடர்பிலும் உறுப்பினர் பிரசாத் வடக்கு மாகாண ஆளுநரிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.
குறித்த கடிதத்தில், (20-10-2026) அன்று நடைபெற்ற கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் JCB கொள்வனவு தொடர்பான விவாதத்தின்போது ஏற்பட்ட முரண்பாடு மற்றும் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தனது முறைப்பாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி தனக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அநீதிக்குத் தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்பதே அவரது முறைப்பாட்டின் நோக்கமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |