புத்தளத்தில் இருவரின் உயிரைப் பறித்த பேருந்து விபத்து:15 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ 19ஆவது மைல்கல் பகுதியில் நேற்று (22) மாலை அதிசொகுசு பேருந்தொன்று விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 15இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் நோக்கி பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளானதாக சாலியவெவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
குறித்த பேருந்து மோட்டார் சைக்கிளொன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பாலத்தில் மோதி, வீதியை விட்டு விலகிச் சென்று சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அதி உயர் அழுத்த மின் கம்பத்துடன் மோதி கவிழ்ந்துள்ளது.

குறித்த பேருந்தில் சுமார் 50 பேர் பயணித்திருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் பேருந்தில் பயணித்த பெண் ஒருவருமே இதில் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த பேருந்தின் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பேருந்து மோதியதில் அதி உயர் அழுத்த மின் கம்பம் பலத்த சேதமடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாலியவெவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |