விகார மகாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட துறவிகளுக்கு நீதிமன்ற பிறப்பித்த உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விடுதலை வழங்குமாறு கோரி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறுந்துவத்தை காவல் நிலையப் பொறுப்பதிகாரி கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் உலப்பனே சுமங்கல தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும்.
சட்டத்தின் 106(1)ஆம் பிரிவு
விகாரமகாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலைக்கு அருகிலுள்ள பகுதி, நடைபாதைகள் மற்றும் எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, கன்னங்கர மாவத்தை, கிரீன் பாத் மற்றும் மலர் வீதி உள்ளிட்ட வீதிகளை மறித்து இடையூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மலர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்னாலும், விகாரமகாதேவி பூங்காவில் உள்ள புத்தர் சிலையைச் சூழவுள்ள பகுதியிலும் தொடர்ச்சியாகத் தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறும், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106(1)ஆம் பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டத்தின் 106(3)ஆம் பிரிவின் பிரகாரம், உத்தரவை நடைமுறைப்படுத்த காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறுவது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 185ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |