மன்னாரை மீட்டெடுக்க எங்களைத் தவிர யாரும் இல்லை : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
காற்றாலை மின்திட்டத்தை அமைப்பதன் மூலம் மன்னாருக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது எனவும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மன்னார் காற்றாலை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக இன்று பாரிய ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் எதிர்ப்பு
நேற்று முன்தினம் அதிகாலை இக்காற்றாலை மின்னிலையம் அமைப்பதற்கான உபகரணங்களை வாகனங்களில் கொண்டு வரும்போது பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதற்கு காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இவ் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் உரிய தரப்புகளுடன் பேசப்பட்டது. தற்போது மின்சார கம்பங்களை நிறுவுவதற்குரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளது அவற்றை அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனவே அதனை அமைப்பதற்கு விடுங்கள் என மக்களை நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டவர்களை பார்க்கின்ற போது கடந்த காலத்திலே காற்றாலை மின் நிலையத்தை அமைக்கும் போது அதனை திறந்து வைக்கும் போது நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
அந்த கம்பெனிகளோடு ஏதோ ஒரு வகையில் கொடுக்கல் வாங்கல்களை செய்தவர்கள் இன்றைக்கு இந்த போராட்டத்தின் பின்னால் இருக்கிறார்கள். போராட்டக்காரர்கள் மன்னாரை மீட்டெடுப்போம் என போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள்.
மன்னாரை மீட்டெடுப்பதற்கு எங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது. மன்னாருக்கு இதன் மூலம் எந்த பாதிப்பும் இல்லை. மன்னாருக்கு அதிகளவான பாதிப்பை ஏற்படுத்துவது கனிய மணல் அகழ்வு அதனை நாம் இப்போது நிறுத்தி இருக்கிறோம்.
காற்றாலை மின் நிலையம்
மக்களிடம் நாம் கேட்கின்றோம் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் செயற்பாடு தொடர்பாக உலகம் முழுக்க தேடிப் பார்க்கின்ற போது இலங்கையில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட காற்றாலை மின் நிலையங்களை பாருங்கள் அந்தப் பிரதேசங்களை பாருங்கள் அந்தக் கடற் பகுதிகளை பாருங்கள் அங்கே மீன் இனங்கள் வரவில்லையா பறவை இனங்கள் வரவில்லையா உயிரினங்கள் வரவில்லையா இயற்கைக்கு எந்தவிதமான மாசு ஏற்பட்டு இருக்கின்றதா என்பதை தேடி பாருங்கள்.
அவ்வாறு மாசு ஏற்பட்டிருந்தால் அவ்வாறான தாக்கங்கள் ஏற்பட்டிருந்தால் அவை நிரூபிக்கப்படுமானால் நாங்களும் கூட உங்களோடு சேர்ந்து போராடுவதற்கு தயாராக இருக்கிறோம்.
கடந்த காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கின்ற போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் தற்போது எதிர்ப்பை தெரிவிப்பது இவர்களுக்கு பின்னால் ஓர் அரசியல் காய் நகர்த்தல் இருக்கின்றது என்பது நமக்கு புலப்படுகின்றது.
மன்னாரில் வாழ்கின்ற மக்களிடம் நாங்கள் அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். இன்று விதிக்கப்பட்டுள்ள பொறியில் நீங்கள் சிக்க வேண்டாம் இந்த பொறியானது உங்களுக்கு மட்டுமல்ல எதிர்கால சந்ததிக்கும் வைக்கப்பட்டுள்ள பொறி உங்கள் பிரதேசத்துக்கான பொறி உங்கள் பிரதேசத்துக்கு எந்த அபிவிருத்திகளையும் வராமல் தடுக்கின்ற பொறி.
எனவே மன்னார் மக்கள் இவ்விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். விஞ்ஞான ரீதியாகவும் தற்க ரீதியாகவும் மக்களை பாதிக்கின்ற எந்த செயற்திட்டத்தையும் நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
