தமிழரசு கட்சி வெல்வது காலத்தின் கட்டாயம்: மனோ கணேசன்
தமிழ் முற்போக்கு கூட்டணியும், இலங்கை தமிழரசு கட்சியும் வெல்வது காலத்தின் கட்டாயம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
அவரால் இன்றையதினம் (26.10.2024) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்நாட்டின் தேசிய இன பிரச்சினை என்ற தீரா சவாலுக்கு தீர்வாக முன் வைத்துள்ள ஒரே யோசனை, 2015 முதல் 2018 வரை நல்லாட்சியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்த புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கிலான சர்வகட்சி கலந்துரையாடலை முன்னேடுப்போம்.
அரசியல் வெற்றி
ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்த யோசனையை நாம் வரவேற்கிறோம். அனுர ஆட்சிக்கு வந்த இந்த ஒரே மாதத்திற்கு உள்ளேயே நாட்டின் அனைத்து சவால்களுக்கும் பதில் தரவேண்டும் என்ற குறுகிய அரசியலையும் நாம் செய்யவில்லை.
புதிய அரசுக்கு நியாயமான அவகாசம் கொடுக்க பட வேண்டும் என நாம் எண்ணுகிறோம். தென்னிலங்கையில் தமிழ் முற்போக்கு கூட்டணியும், வடகிழக்கில் இலங்கை தமிழரசு கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் நாடாளுமன்றத்தில் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம்.
இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நல்லாட்சியின் போது (2015-2018) நடந்த நல்ல பல விடயங்களில் ஒன்று, நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சமபல தீர்வுகளை தேடும் புதிய அரசியலமைப்பு ஒன்றை கலந்துரையாடி உருவாக்கும் பணியாகும். அது ஒரு சர்வ கட்சி பணி.
புதிய அரசியலமைப்பு
2015 ஆம் ஆண்டு, சபாநாயகர் நாடாளுமன்றத்தில் பெயர் குறிப்பிட்டு நியமித்த வழிகாட்டல் குழு (Steering Committee), புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கில், கலந்துரையாடி, வாத விவாதம் செய்து, குறைந்தபட்ச பொது உடன்பாடுகளில் கருத்தொற்றுமை கண்டு முன்னெடுத்தது.
இடைக்கால அறிக்கையையும் சமர்பித்தது. இன்னும் பல துறைசார் உப குழுக்ளையும் தனக்கு உதவியாக நியமித்தது. இன்று, இனவாதிகள் அரசியல் பரப்பில் கணிசமாக இல்லை.
ஆகவே, நாம் அனைவரும் அன்று ஆரம்பித்த, புதிய அரசியலமைப்பை எழுதும் சர்வ கட்சி பணியை தொடர போவதாக ஜனாதிபதி அனுர திசாநாயக்க அறிவித்துள்ளதை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
தமிழரசு கட்சி வெற்றி
மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும், அரசியல் யாப்பை உருவாக்கும் உரையாடலில் ஆளுமையும், அனுபவமும் உள்ள சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் பங்கு பெற வேண்டுமா? இல்லையா? என்பதை தமிழ் வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும்.
இந்த நோக்கில், கொழும்பு (Colombo), கம்பஹா, இரத்தினபுரி (Ratnapura), கேகாலை, கண்டி, நுவரெலியா (Nuwara Eliya), பதுளை மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியும், யாழ்ப்பாணம் (Jaffna), வன்னி, திருகோணமலை (Trincomalee), மட்டக்களப்பு (Batticaloa), அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும் இலங்கை தமிழரசு கட்சியும் வெற்றி பெற்று அரசியல் பலத்துடன் நாடாளுமன்றத்தில் இடம் பெறுவது காலத்தின் கட்டாயம்.
இதை தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |