இலங்கைக்கு எதிராக பல நாடுகள் கூட்டு சதி! பதிலடி கொடுக்க இலங்கை தயார்
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக சமர்ப்பித்த கூட்டுத் தீர்மானத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வெளியுறவு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் சமர்ப்பித்த தீர்மானத்தின் விதிகளை நாட்டின் அரசியலமைப்பின் படி ஒருபோதும் செயல்படுத்த முடியாது. மேலும், இலங்கை நீதிமன்றங்களில் வெளிநாட்டு நீதிபதிகள் இருக்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
கனடா, ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகள் இந்த ஆண்டு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை முன்வைக்க தயாராக இருப்பதை ஐக்கிய இராச்சியத்தின் நிரந்தர பிரதிநிதி அண்மையில் உறுதிப்படுத்தினார். அத்தகைய தீர்மானத்தை எதிர்க்க இலங்கையுடன் நிற்கும் எந்த நாடுகளையும் இலங்கை ஆதரிக்கும் என்பதை தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணையம் 47 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஆனால் இந்த 47 நாடுகளில், ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும், லத்தீன் அமெரிக்காவின் நாடுகளும் இலங்கைக்கு நட்பான பதிலை அளித்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.