கொழும்பில் கடற்படை சிப்பாய்க்கு ஏற்பட்ட நிலை
கொழும்பு கோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பரோன் ஜயதிலக மாவத்தையில் பழுதுபார்க்கப்பட்டு வரும் கபூர் கட்டடத்தின் மேல் மாடியில் இருந்து அவர் வீழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கட்டடம் சிறிலங்கா கடற்படை பொறியாளர்களால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (நவ.26) மேல் தளத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்தில் சிப்பாய் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கந்தேகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.