யாழ் உள்ளிட்ட கடல் மார்க்கங்களில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள்: தீவிரப்படுத்தப்படும் சோதனைகள்
பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு தப்பியோடவும் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு கடத்தல்களுக்காக அதிகளவில் கடல்வழி மார்க்கங்களை பயன்படுத்துவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, யாழ்ப்பாணம், சிலாபம், தெவுந்தர உள்ளிட்ட ஐந்து கடல்வழி மார்க்கங்களை குறி வைத்து பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
குறித்த கடற்பரப்புகளில் கடற்படை மற்றும் விமானப்படை பாதுகாப்பையும் தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல்கள் அதிகரிப்பு
படகுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் சிலாபம் கடற்பரப்புகளை இலக்கு வைத்து குறித்த ஆட்கடத்தல் வியாபாரங்கள் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இந்தியா மற்றும் இலங்கை இடையே இடம்பெறும் போதைப்பொருள் உள்ளிட்ட கடத்தல்களும் அதிகரித்துள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி மற்றும் குழுவினர் படகு மூலம் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடல்வழியாக மஞ்சள் மற்றும் இஞ்சி கடத்தலும் அதிகளவில் இடம்பெறுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
