இலக்கத்தகடுகளற்ற மோட்டார்சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வந்தவர்களால் வெடித்தது சர்ச்சை
இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றவேளை நாடாளுமன்றிற்கு வெளியே மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது இலக்கத்தகடு அற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தொடர்பில் சர்ச்சை வெடித்துள்ளது.
நாடாளுமன்றுக்கு வெளியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அப்பகுதிக்கு திடீரென இலக்கதகடுகளற்ற மோட்டார்சைக்கிள்களில் அறுவர் மிகவும் வேகமாக வந்தனர்.இதில் ஒரு மோட்டார் சைக்கிள் வேகமாக முன்நோக்கி செல்ல பின் வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காவல்துறையினரை கண்டு திரும்பி சென்று விட்டன.
இந்த நிலையில் முன் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்த காவல்துறையினர் அவர்களை விசாரித்து மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் முகத்தை மறைத்த துணியை கிழித்தெறிந்தனர்.அத்துடன் அவர்களது மோட்டார் சைக்கிள் சாவியையும் எடுத்தனர்.
ஆனால் அவ்வாறு வந்தவர்கள் இராணுவத்தினர் எனவும் இராணுவ சிப்பாய்களை துன்புறுத்திய காவல்துறையினருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


