இந்திய அமைதி படையினரின் வெறியாட்டம் - யாழ். வைத்தியசாலையில் பலியான 68 அப்பாவிகளுக்கு நினைவேந்தல்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை காலை அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலைச் சமூகத்தினர் மற்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மலரஞ்சலி
இதன்போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படங்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படையினர் நடத்திய தாக்குதலில், வைத்தியசாலைப் பணியாளர்கள் 21 பேர் உட்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், பலரும் காயமடைந்தனர்
மருத்துவ சேவைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த இந்தப் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், 39 ஆண்டுகள் கடந்தும் அவர்களின் நினைவுகள் உறவினர்கள் மற்றும் வைத்தியசாலைச் சமூகத்தினரால் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டன.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |