ஏழு பேருக்கு நீதிமன்ற தடை- கிழக்கிலும் வெடித்தது மாபெரும் போராட்டம்
கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (04.02.2025) மட்டக்களப்பு - செங்கலடி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
மட்டக்களப்பு கவல்துறை தலைமையகத்தினால் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவு பெறப்பட்ட நிலையில் இந்த போராட்டம் செங்கலடியில் நடைபெற்றுள்ளது.
சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள்
இந்த போராட்டத்தில், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கையின் சுதந்திர தினம் எங்களுக்கு கரிநாள், நீங்கள் சுதந்திரம் அனுபவிக்கும் போது நாங்கள் ஒடுக்கப்படுவதா, உங்களுக்கு சுதந்திரநாள் எங்களுக்கு திண்டாட்ட நாள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே.
மற்றும் எமது மேய்ச்சல் தரை எமக்கு வேண்டும், நிம்மதியில்லாத நாட்டில் சுதந்திரம் எதற்கு,சுதந்திரம் இல்லாத நாட்டில் சுதந்திர தினம் எதற்கு, எங்கே எங்கே உறவுகள் எங்கே உட்பட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இரா.சாணக்கியன் மற்றும் இ.சிறிநாத், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் வங்கத்தின் மட்டக்களப்பு தலைவி அ.அமலநாயகி உட்பட ஏழு பேருக்கு மட்டக்களப்பு நீதிமன்ற நியாதிக்க எல்லைக்குகள் பேரணி நடத்துவதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக செங்கலடி நகரில் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - சக்திவேல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |