சினிமா பாணியில் பாரிய கொள்ளை! வெளிநாட்டவர்களால் தென்னிலங்கையில் பரபரப்பு
வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கொள்ளை நடவடிக்கை
காலி, களுவெல்ல பிரதேசத்தில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு தங்க பொருட்களை கொள்வனவு செய்வதாக கூறி வந்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் பாரிய கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த இருவரும் சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான 28 தங்க நகைகளை மோசடியான முறையில் திருடிச் சென்றுள்ளதாக காலி காவல்துறையினர் தெரிவித்தனர்.
சினிமா பாணியில் கொள்ளை
வெளிநாட்டு பிரஜைகள் இருவரும் கடந்த 24ஆம் திகதி மதியம் முச்சக்கர வண்டியில் இரண்டு சிறிய பைகளுடன் நகைக்கடைக்கு வந்துள்ளனர்.
ஒரு பையில் போலி தங்க நகைகள் காணப்பட்டுள்ளனர். மற்றொரு பை வெறுமையாக காணப்பட்டுள்ளது. இருவரும் நகைக் கடையில் உள்ள மேசையில் இரு பைகளையும் வைத்துவிட்டு நகைக்கடை உரிமையாளரிடம் தங்க நகைகளின் விலை குறித்து பேசியுள்ளனர்.
நகைகளை பரிசோதித்துவிட்டு சிறிது நேரம் கழித்து 28 தங்க ஆபரணத்தை வாங்கிக் கொள்வதாக நகைக் கடையின் உரிமையாளரிடம் வெளிநாட்டவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
கொள்வனவு செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்த 28 தங்க ஆபரணத்தை வெளிநாட்டைச் சேர்ந்த இருவரும் தமது வெற்று பையில் வைத்துள்ளனர்.
எனினும் நகைகளில் கரட் அளவை சரிபா்க்க வேண்டும் என நகை கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய அவர்கள் கடைக்கு கொண்டுவந்த போலி ஆபரணத்தை மேசை மீது வைத்துவிட்டு கடையில் இருந்த நகைகளை சாதுர்யமாக எடுத்து சென்றுள்ளனர்.
பையை சோதனையிட்ட போதே அது தங்களுடைய கடைக்கு சொந்தமானது அல்ல எனவும் அது போலியாதெனவும் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு பிரஜைகள் இருவரில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.