ஆட்ட நிர்ணய சதி: முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு!
ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில், விளையாட்டுக்களில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்கும் விசேட விசாரணை பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு நேற்று கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதிவாதியின் குரல் பதிவு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என விளையாட்டுக்களில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்கும் விசேட விசாரணை பிரிவினர் இதன்போது மன்றுரைத்துள்ளனர்.
விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு
இதன்காரணமாக அறிவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு சென்று விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சந்தேகநபருக்கு உத்தரவிடுமாறு அவர்கள் நீதிமன்றில் கோரியிருந்தனர்.
இதற்கமைய, அறிவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான், முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |