பிரபல நகைச்சுவை பிரபலம் மத்யூ பெர்ரி உயிரிழந்தார்
லொஸ் ஏஞ்சல்ஸ் இன் பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை நட்சத்திரமான மத்யூ பெர்ரி நேற்றைய தினம் (28) தனது 54ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்தினை லொஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையின் கொள்ளை-கொலைப் பிரிவின் கப்டன் ஸ்கொட் வில்லியம்ஸ் உறுதி செய்துள்ளார்.
அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்ட "நண்பர்கள்" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வாயிலாக அனைவருக்கும் பரீட்சயமானவராக அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு நகைச்சுவை நட்சத்திரமாக வலம் வந்தவர் தான் மத்யூ பெர்ரி.
போதைப்பழக்கத்திற்கு அடிமை
1979 ஆம் ஆண்டு தனது தொலைகாட்சியில் தடம் பதித்த இவர் சுமார் நான்கு தசாப்தங்களை தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்காக அர்ப்பணித்துள்ளார், ஏராளமான நிகழ்ச்சிகளில் இவர் பங்குபற்றியிருந்தாலும் நண்பர்கள் நிகழ்ச்சியே இவரை உலகிற்கு அடையாளப்படுத்தியிருந்தது.
இந்த நண்பர்கள் நிகழ்ச்சியில் வெளியான 10 பாகங்களிலும் சுமார் 200 இற்கும் அதிகமான அத்தியாயங்களில் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படி தனது தொழில் வாழ்வில் சிறந்து விளங்கிய இவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானதன் காரணமாக உடல் நல குறைவுக்கு ஆளாகி இதன் காரணமாக மருத்துவ சிகிச்சைகளை பெற்று வந்துள்ளார்.
இவர் 1997 ஆம் ஆண்டு முதல் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி பின்னர் 2000ஆம் ஆண்டளவில் மறுவாழ்விற்குச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டளவில் பல்வேறு உடல்நலப்பிரச்சினைகளுக்கு ஆளாகி மருத்துவமையில் அனுமதிக்கப்பட்ட இவர், நிமோனியா, பெருங்குடல் வெடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு உள்ளானார் சுமார் 12 அறுவை சிகிச்சைகள் இவரது வயிற்றுப்பகுதியில் இடம்பெற்றுள்ளது, இரண்டு வாரங்கள் கோமாவில் இருந்த இவர் ஈற்றில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
நகைச்சுவை மேதையாக தன்னை உலகிற்கு அடையாளபடுத்தி அனைவரின் சிரிப்பிற்கும் காரணமாக இருந்த மத்யூ பெர்ரி இன்று மௌனித்து உறங்கி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.