புலம்பெயர் தேசங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் ஆரம்பம்!! ஈகைச்சுடரேற்றி அஞ்சலி
உலகின் புவிசார் ஒழுங்கு எவ்வாறு மாறிக்கொண்டாலும் தமிழர் தாயகத்தில் மாவீரர் கல்லறைகள் அழிக்கப்பட்டிருந்தாலும் தாயகத்தின் இயங்குநிலை சாட்சியங்களாக என்றென்றும் மிளிரும் தேசியப்புதல்வர்களுக்கான வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றே வருகின்றன.
மாவீரர் ஈகம் என்ற வரலாற்று நீதியின் முன்னால் உலகப்பரப்பில் மீண்டுமொரு முறை அகவழித் துதிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
சுதந்திர தமிழர் தாயகத்துக்கான ஆயுதவழி அரசியல் உரிமைப் போராட்டம் மௌனிக்கப்பட்டுவிட்டாலும் அறவழியில் தமது அரசியல் அபிலாஷைகளுக்குரிய தடத்தை நகர்த்துவதற்கான உத்வேகத்தை பெறும் உறுதியெடுக்கும் நாளாகவும் இந்த நாள் அமைகின்றது.
இதனால் ஈழத் தமிழனத்துக்கு நவம்பர் 27 இல் வரும் தேசிய நினைவேந்தலான மாவீரர் நாள் அவர்களின் சமகால வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அந்தவகையில் இரண்டாவது வருடமானலும் கொரோனா பெருந்தொற்றின் கடுமையான தாக்கம் இருந்தாலும் கடந்த முறை தவறவிடப்பட்ட அரங்க நிகழ்வுகள் இந்த முறை முன்னெச்சரிக்கை நடைமுறைகளுடன் மீண்டும் திரும்பியுள்ளன.
அந்த வகையில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா உட்பட்ட வட அமெரிக்க நாடுகளின் உள்ள நகரங்களில் பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் நிகழ்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
சற்றுமுன் மாவீரர்நாள் நடைமுறைப்படி, தாயகநேரம் மாலை 6.05 மணியை மைப்படுத்திய அகவணக்கத்துடன் ஈகைச்சுடரேற்றப்பட்டு மாவீரர் துயிலும் இல்லப்பாடலும் இசைக்கப்பட்டது.
இதன்பின்னர் நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளன. இந்தநிகழ்வுகள் அனைத்தும் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.