நினைவேந்தலுக்கு தயாராகும் முள்ளிவாய்க்கால் முற்றம் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தமிழினப் படுகொலையின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் மே 18ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்திலும் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் தமிழினப் படுகொலை வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று (12) மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திலே சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலே மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வழமை போன்று நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பொதுக்கட்டமைப்பினர் குற்றச்சாட்டு
மேலும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை பரிமாறுகின்றவர்கள் கஞ்சியை சுவையாக வழங்க வேண்டும் என்பதற்காக கஞ்சியில் பல பொருட்களை சேர்ப்பதாகவும் பொதுக்கட்டமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே முள்ளிவாய்க்கால் கஞ்சியை எதற்காக வழங்குகின்றோம் என்பதை உணர்ந்து முள்ளிவாய்க்காலில் எவ்வாறு அரிசி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை மட்டும் கொண்டு கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டதோ அவ்வாறே முள்ளிவாய்க்கால் கஞ்சியை சரியான முறையில் பரிமாறுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வியாபார நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |