இலங்கையில் அர்த்தபூர்வ அதிகாரபகிர்வு - அமெரிக்காவிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை
அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க செயலர் அன்டொனி பிளிங்டன் இந்த அழுத்தத்தை கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழுவின் இரு உறுப்பினர்கள் அவருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.
சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழுவின் தலைவர் கிரெகரி டபிள்யூ மீக்ஸ் உறுப்பினர் மைக்கல் மக்கோல் ஆகியோரே இந்த கடிதத்தை இராஜாங்க செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இலங்கையின் 30 வருட கால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்தமை முதல் சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழு இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கை நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலிற்கு ஆதரவளிப்பதை உறுதி செய்வதில் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது என அவர்கள் தங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மோதலுக்கான அடிப்படை காரணங்களுக்கு தீர்வை காணவேண்டும் என்பதையும் சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழு வலியுறுத்தி வந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உறுதியான மற்றும் நிலையான அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இலங்கை குறித்த அதன் முயற்சிகளில் இராஜாங்க திணைக்களத்தை மீள கவனம் செலுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இலங்கையில் மனித உரிமைகள் நீதிக்காக அமெரிக்கா சரியான விதத்தில் குரல்கொடுத்துள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த விழுமியங்களை முன்னெடுப்பதற்கு யுத்தம் முடிவடைந்து பல வருடங்களின் பின்னரும் தீர்வு காணப்படாமலிருக்கின்ற அரசியல் கேள்விகளிற்கான தீர்வுகளை முன்வைப்பது அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிக்கப்படாத இலங்கையில் அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வும் இதற்கான தீர்வுகளில் இடம்பெற்றிருக்கவேண்டும். தமிழ் முஸ்லீம் எதிர்க்கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதை இராஜாங்க திணைக்களம் ஆதரிக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயத்திற்கு இலங்கை மக்கள் தலைமை தாங்கவேண்டும் அதேவேளை இந்த முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் அமெரிக்கா தயாராகவுள்ளது என்பதை இராஜாங்க திணைக்களம் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் எனினும் இறுதியில் எந்தவொரு தீர்வும் தமிழ் முஸ்லீம் மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டியது அவசியம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்