கபில சந்திரசேன பிணை மோசடி...! இடைத்தரகராகச் செயற்பட்டவர் அதிரடியாக கைது
சிறிலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்காகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு பிணை நின்ற இருவரை இணைப்பதற்கு இடைத்தரகராகச் செயற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 76 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும்போது இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் கபில சந்திரசேன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
நீதிமன்றில் கோரிக்கை
இந்த வழக்கு கடந்த 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த ஐந்தாம் திகதி கபில சந்திரசேனவிற்குப் பிணை அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை அவர் மீறியுள்ளதாகவும் இதன் மூலம் நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சீர்குலைத்துள்ளதாகவும் கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தது.

எனவே, அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை ஒன்றையும் பிறப்பிக்குமாறு ஆணைக்குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தவறான முடிவு
இதற்கு அடுத்த நாள், அதாவது கடந்த எட்டாம் திகதி கபில சந்திரசேன தவறான முடிவெடுத்து உயிரிழந்திருந்தார்.
இந்தநிலையில், கபில சந்திரசேன பிணையில் செல்வதற்கு கையொப்பமிட்ட மூன்று சரீரப் பிணையாளர்களில் இருவர் பணத்துக்காகப் பொய் சாட்சி தெரிவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கபில சந்திரசேனவுக்குப் பிணை வழங்குவதற்காகச் சாஞ்சி ஆராச்சிவத்தையைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் மற்றும் முகமது இர்ஷான் ஆகிய இருவரும் பிணையாளர்களாக நீதிமன்றில் முன்னிலையாகிய நிலையில் அவர்களுக்கும் கபில சந்திரசேனவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மறுபுறம் கபில சந்திரசேனவும் உயிரிழந்திருந்தார்.
இந்த பின்னணியில், தற்போது பிணை நின்ற இருவரை இணைப்பதற்கு இடைத்தரகராகச் செயற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |