48 மணிநேர வேலைநிறுத்தத்தில் குதித்த வைத்தியர்கள்
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் 48 மணி நேர வேலைநிறுத்ததில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
குறித்த போராட்டம், இன்று (09.04.2026) முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர், பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சுகாதார அமைச்சகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறி, உள்வைத்திய பயிற்சிக்குப் பிந்தைய வைத்திய நியமனங்கள் வழங்கப்பட்டதைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
பிந்தைய வைத்திய நியமனங்கள்
உள்வைத்தியப் பயிற்சிக்குப் பிந்தைய வைத்திய நியமனங்களுக்கு விண்ணப்பித்த 436 புதிய வைத்திய அதிகாரிகளுக்கான புதிய நியமன இடங்களை சுகாதார அமைச்சகம் நேற்று (08.04.2026) அறிவித்திருந்தது.

இந்நிலையில், வைத்தியர்கள் இன்று முதல் 11 ஆம் திகதி வரை தாங்கள் பணியாற்றும் அரசாங்க வைத்தியசாலைகள் அல்லது சுகாதார நிறுவனங்களில் முன்னிலையாக வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் அவர்களுக்குத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சுகாதார அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையால், தங்களது சங்கத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |