அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்த மட்டக்களப்பு முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள்
அமெரிக்க (US) இராஜாங்க திணைக்கள உயர்மட்ட அதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் தொழில் வாண்மையாக மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றிய தவிசாளர் யு,எல்,எம்,என்,முபீன் தலைமையில் ஏறாவூர் பள்ளி வாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் ஏறாவூர் ஜம்இய்யதுல் உலமா தலைவர் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது, நேற்றையதினம் (07) "ஈஸ்ட்லகூன்" ஹோட்டலில் நடைபெற்றது.
முதலில் கருத்து தெரிவித்த அமெரிக்க தூதுவராலாயத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சக்லோன்ஸ் (ZachLohnes), இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலும் அரசியல் உரிமைகள் தொடர்பிலும் மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் எதிர் நோக்குகின்ற மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான பிரச்சினைகளை கேட்டு அறிய வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அடக்குமுறைகள்
அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றியத்தின் தவிசாளர் , யு.எல் எம் என் முபின்"இலங்கையில் தற்போது மனித உரிமைகளை பாதிக்கும் பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதையும் அண்மையில் உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பிலும் மக்களின் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் நிகழ்நிலை சட்டம் தொடர்பிலும் மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் திட்டமிட்டுள்ள சில சட்டங்கள் தொடர்பிலும் அதன் பாதிப்புகள் தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் ,காணி உரிமைகள் தொடர்பிலான மீறல்கள், மற்றும் நிர்வாக ரீதியான அடக்குமுறைகளை பட்டியலிட்டு அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரிகளுக்கு ஒன்றியத்தின் தவிசாளர் யு.எல் எம் என் முபின் தெளிவுபடுத்தினார்.
ஏறாவூர் பிரதேசத்தில் கிராம சேவையாளர்கள் பிரிவுகள் தற்காலிகமாக ஏறாவூர் பற்றோடு இணைக்கப்பட்டு அவை நீண்ட காலமாக செங்கலடி பிரதேச செயலகத்தினால் நிர்வாகம் செய்யப்படுவதில் அப்பிரதே மக்கள் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை தரவுகளுடன் ஏறாவூர் பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் சக்கூர் முன்வைத்தார்.
காணி பிரச்சினைகள்
இதனிடையே மட்டக்களப்பு மாவட்டத்திலே வாழச்சேனை ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் மற்றும் ஏனைய உரிமை மீறல்கள் தொடர்பில் விளக்கம் ஒன்றை முபீன் அளித்தார்.
மேலும், தொல்பொருளியல் மற்றும் வன இலாகா, வன ஜீவராசிகள் தொடர்புடைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்,
இதன் போது கருத்து தெரிவித்த முபின் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இத்தகைய பிரச்சினைகளை பட்டியலிட்டு கூறியதுடன் திருகோணமலை கருமலை ஊற்று முஸ்லிம்களின் பாரம்பரிய காணி தொடர்பிலும் கன்னியா நீரூற்றுப் பகுதியில் இருக்கும் முஸ்லிம்களின் காணி பிரச்சினைகள், புல்மோட்டை காணி அத்துமீறல்கள் தொடர்பிலும் அம்பாறையில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் வட்டமடு, பொன்னன் வெளி, அஷ்ரப் நகர்,மற்றும் நுரைச்சோலை வீட்டு திட்டம் தொடர்பிலும் அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து தெளிவுப்படுத்தினார்.
இனப் பிரச்சினை
இனப் பிரச்சினைகள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைக்கும் விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் நிலைப்பாடு தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்,
அதற்கு பதில் அளித்த முபின், “13 ஆம் திருத்தத்தை நடைறைப்படுத்த போவதாக பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் கூறுகின்றனர், இலங்கையின் இனப்பிரச்சினை கண்டிப்பாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் ஆனால் தற்போது நடைமுறையில் உள்ள அதிகாரப் பரவலாக்க நடைமுறைகளான பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக நடைமுறைகளில் முஸ்லிம்கள் பல்வேறு உரிமை மீறல்களையும் அடக்குமுறைகளையும் எதிர் நோக்குகின்றனர்.
இந்த வேளையில் 13ஆம் திருத்தத்தின் காணி அதிகாரம் மற்றும் ஏனைய அதிகாரங்களை வழங்குகின்ற போது தங்களுக்கு மிகப்பெரும் நிர்வாக ரீதியான பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர் எனவே உலகத்தின் முதன்மை நாடான அமெரிக்கா இலங்கை முஸ்லிம்களுக்கும் பொருத்தமான இனப் பிரச்னை தீர்வு கிடைப்பதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்,அதே நேரத்தில் இந்த தீர்வு விடயத்திலே முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படாத வகையில் எல்லா மக்களுக்குமான சமத்துவ உரிமைகள் கிடைப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
மேற்படி விடயங்களை மிக அக்கறையுடன் குறிப்பெடுத்துக் கொண்ட அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு நன்றி கூறி விடை பெற்றனர்.
இந்த சந்திப்பில் ஏறாவூர் ஜெம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மெளலவி சாஜித் ஹுசைன் ஏறாவூர் பள்ளி வாயில்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் சக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மவ்லானாவின் செயலாளர் ஓய்வுபெற்ற அதிபர் சஹீத், இளைஞர் சேவை அதிகாரி இர்ஷாத் மற்றும் சித்திக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |