போரினால் பாதிக்கப்பட்ட தரப்பினருடனான சந்திப்புக்கள் விரைவில்: உண்மை, நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் அறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட தரப்பினருடனான முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட சந்திப்புக்கள் இம்மாத இறுதியிலிருந்து ஆரம்பமாகுமென உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் கொள்கைப் பிரிவுத் தலைவர் யுவி தங்கராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் பணிகள் அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் விதமாக கலாநிதி அசங்க குணவன்ச தலைமையில் இயங்கிவரும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் அண்மையில் வட மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நிகழ்த்தியிருந்தது.
விமர்சனம்
இருப்பினும் இச்சந்திப்புக்களில் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், போர் விதவைகள் மற்றும் முன்னாள் போராளிகள் உள்ளடங்கலாக போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட எந்தவொரு தரப்பினரும் உள்வாங்கப்படவில்லை என்ற விமர்சனம் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்டிருந்தது.
எனவே, பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய தீர்வினை வழங்கும் நோக்கில் இயங்குவதாகக் கூறும் உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகம் பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்காதது ஏனெனவும் மற்றும் செயலகத்தின் சந்திப்புக்களில் பங்கேற்றவர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்களெனவும் யுவி தங்கராஜாவிடம் கேள்வியெழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்த யுவி தங்கராஜா மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் தமது செயலக அதிகாரிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்ற வரையறுக்கப்பட்ட சில தரப்பினருடன் மாத்திரமே சந்திப்புக்களில் ஈடுபட்ட நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினருடனான பரந்துபட்ட சந்திப்புக்களில் இன்னமும் ஈடுபடவில்லை.
ஒழுங்குவிதி
அதேவேளை உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதில் முன்னிலையாகும் தரப்பினர் கையாளப்படவேண்டிய முறை உள்ளிட்ட ஒழுங்குவிதிகளை நாம் இப்போது தயாரித்து வருகின்றோம்.
அதேபோன்று வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாக நாம் சந்திக்கவேண்டிய பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த தகவல்களைத் திரட்டி வருகின்றோம்.
அந்த தகவல்களை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், அரச சார்பற்ற அமைப்புக்களின் செயலகம், மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புக்களின் ஊடாக சேகரிக்கின்றோம்.
மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருடன் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை பேணி வந்திருந்தாலும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பு ரீதியிலான சந்திப்புக்கள் இம்மாத இறுதியில் அல்லது எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஆரம்பமாகும்” என கூறி அவர் உத்தரவாதம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |