பாதுகாப்பு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் : எடுக்கப்பட்ட நடவடிக்கை
தனக்கு பாதுகாப்பு தேவை என கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் காவல்துறைமா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் எதிர்த்தரப்பு கட்சித் தலைவர்கள் சிலர் 20ஆம் திகதி சபாநாயகரை சந்தித்து தமது பாதுகாப்புத் தொடர்பான சிக்கல்களை முன்வைப்பதற்கு கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு நிலைமை
இதன்போது, நாட்டில் காணப்படும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் அறிவுறுத்திய காவல்துறைமா அதிபர், அண்மைக்காலமாக இடம்பெற்ற பல மனிதப்படுகொலைகள் குற்றக் கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கிடையில் இடம்பெறும் மோதல்களின் விளைவுகள் எனவும், அந்தக் குற்றச் செயல்களுக்கு பிரதேச அரசியல்வாதிகளின் தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கைகளை பெற்றுக் கொள்ளும் வரை, முழுமையான பாதுகாப்பை அகற்றாமல், பாதுகாப்பு தேவை எனக் கூறும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொருத்தமாகும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பான மதிப்பீடு அறிக்கை கிடைத்தவுடன் அதன் பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க ஆகியோரும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள், பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
