கடலில் அடித்துவரப்பட்டது கடற்கன்னியா...! குழப்பத்தில் நிபுணர்கள்
பப்புவா நியூ கினியாவில் உள்ள கடற்கரையில் குளோப்ஸ்டர் என்று அழைக்கப்படும் வினோதமான உடல் ஒன்று கரையொதுங்கியுள்ள நிலையில், அது அறிவியல் அறிஞர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான, வெளிர் மற்றும் சிதைந்த, கடல் கன்னியைப் போன்ற உடல் ஒன்று, கடந்த செப்டம்பர் மாதம் 20ம் திகதி, பப்புவா நியூ கினியாவின் பிஸ்மார்க் கடலில் உள்ள சிம்பேரி தீவில் உள்ள மக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அது என்ன என்பது குறித்து நிபுணர்கள் இன்னும் உறுதியான தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடல் பாலூட்டி
ஆனால் இது ஒரு மாயமான உயிரினமாக இருக்கலாம் என்று பிரதேசவாசிகள் நம்புகிறார்கள், அதனால் அதனை "குளோப்ஸ்டர்" என்று அழைக்கிறார்கள், அதாவது கரையோரமாக ஒதுங்கிய அடையாளம் தெரியாத பொருள் என்பதால் அவ்வாறு அழைப்பதாக கூறப்படுகிறது.
மேலும் அதனை அடையாளம் காண்பதில் பாரிய சிக்கல் உருவாகியுள்ளது, ஏனென்றால் உடலத்தின் பெரும்பகுதி அழுகியிருப்பதாலும், கடலில் விழுந்த உடல் பாகங்கள் கிடைக்காமல் இருப்பதாலும் இந்த சிக்கல் நிலை உருவாகியிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
உள்ளூர்வாசிகள் அதை புதைப்பதற்கு முன்னர், அதன் அளவு மற்றும் எடை குறித்து எந்த தகவலையும் சேகரிக்கவில்லை என்றும், அந்த விசித்திர உடலின் டிஎன்ஏ (DNA) மாதிரிகளைக் கூட யாரும் சேகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், அவுஸ்திரேலியாவில் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஹெலன் மார்ஷ், இது ஒரு கடல் பாலூட்டி இனத்தை சேர்ந்த விலங்காக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஸ்கொட்லாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் கடல் பாலூட்டி நிபுணரான சாஷா ஹூக்கர் பேசும்போது, "இது எனக்கு மிகவும் சிதைந்த சீட்டெஷியன் போல் தெரிகிறது," என்று கூறியுள்ளார்.
அதாவது சீட்டெஷியன்கள் என்பது திமிங்கலங்கள் மற்றும் டொல்பின்கள் போல கடலில் வாழும் பாலூட்டி இனமாகும்.
ஆக இந்த உயிரினம் கடற்கன்னியா அல்லது கடல்வாழ் பாலூட்டியினமா இல்லையேல் ஏதும் மர்மமான உயிரினமா என்று தெரியாத நிலையில் இந்த மர்மம் தொடர்கிறது.