தூய்மையான குடிநீர் திட்டம்: ஐநாவிடம் அமைச்சர் ஜீவன் விடுத்த கோரிக்கை
2030 ஆம் ஆண்டு பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர் என்ற இலக்கிற்கு தேவையான உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட உதவிகளை ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனம் வழங்க வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு பயணம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் போதே குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன், ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கையின் பிரகாரம் குடிநீர் வழங்கலுக்காக பிரதம அமைச்சின் கீழ் தனியானதொரு செயலகம் நிறுவப்படும் எனவும் அமைச்சர் தெரிவிதுள்ளார்.
ஐநாவிடம் கோரிக்கை
குடிநீர் வழங்குதலில் ஏற்படவுள்ள கொள்கை ரீதியிலான மாற்றம், ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கை என்பன குறித்து ஐநா அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன்போது விளக்கமளித்துள்ளதுடன் காலநிலை மாற்றம் தொடர்பான செயல் திட்டம் பற்றியும் விளக்கமளித்துள்ளார்.
ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கை ஊடாக, குடிநீர் தொடர்பான அனைத்து ஸ்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களை ஒன்றிணைத்து பிரதம அமைச்சரின் கீழ் தனியான செயலாமாக நீர்வழங்கல் கொண்டு வரப்படும் எனவும், அதற்கான ஏற்பாடுகள், அந்த செயலகம் எவ்வாறு செயற்படும் என்பது சம்பந்தமாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதிகாரிகளுக்கு மேலும் எடுத்துரைத்துள்ளார்.
அத்தோடு அமைச்சர், நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்துக்குள் பாதுகாப்பு மற்றும் தூய்மையான குடிநீர் என்பதும் பிரதான விடயமாக உள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இந்த இலக்கை அடைவதே எமது எதிர்பார்ப்பாக உள்ளதாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட எதிர்பாராத சூழ்நிலைகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் இலக்கை அடைவது சவாலாக உள்ளது, எனவே, உரிய காலப்பகுதிக்குள் இலக்கை அடைவதற்கான உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட வசதிகளை ஐநாவின் குடிநீருக்கான திட்டத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்" எனவும் தெரிவித்துள்ளார்.


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 16 மணி நேரம் முன்
