யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு - நாகமுத்து பிரதீபராஜா
புதிய இணைப்பு
வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளதாக நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது யாழ்ப்பாணத்தினை அண்மிக்கும் போது வலுக்குறைந்து தாழ்வு நிலையாகவே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே மலையக மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால் மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் எதிர்வரும் 11.01.2026 வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்றார்.
முதலாம் இணைப்பு
பொத்துவிலுக்கு தென் கிழக்காக சுமார் 580 கிலோமீட்டரில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் இன்று கிழக்கு மாகாணத்தின் கரையோரத்தை நெருங்க உள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த நான்காம் திகதி இந்தோனேசியாவுக்கு மேற்குப் பக்கமாக வங்களா விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காற்றுச் சுழற்சி உருவாகியது.
காற்று சுழற்சி
குறித்த காற்று சுழற்சியானது ஆறாம் திகதி கிழக்கு மாகாணத்தை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதன் வேகம் குறைவடைந்து தற்போது நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறியுள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்காக பொத்துவில் இருந்து சுமார் 550 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மையம் காணப்படுகின்ற நிலையில் இன்று வியாழக்கிழமை எட்டாம் திகதி கிழக்கு மாகாணத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கிருந்து வட மாகாண ஊடாக மன்னார் வளைகுடா அல்லது இந்தியாவின் டெல்டா பிரதேசங்கள் என அழைக்கப்படுகின்ற பகுதிகளுக்கு செல்வதற்கான பாதை வடக்கு ஊடாகவே நகர உள்ளது.
இலங்கை வரலாற்றில் வடகீழ் பருவக்காற்று காலங்களில் இவ்வாறான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகினாலும் 21 வது தடவையாக இந்த நிலை உருவாகியுள்ளது.
2021 ஆம் ஆண்டு இவ்வாறான நிலையொன்று வங்களா விரிகுடாவில் ஏற்பட்டபோது அது இலங்கையை பாதிப்புக்கு உட்படுத்தாமல் இந்தியாவின் தென்கிழக்கு மாகாணங்களை அதிகம் பாதித்தது.
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் நகரும் பாதை 1906 மற்றும் 1908 ஆம் ஆண்டுகளில் உருவான பாதையை ஒத்ததாக அமைந்துள்ளமை சற்று கவனிக்க வேண்டிய விடயம்.
கன மழை கிடைக்க வாய்ப்பு
வடக்கு கிழக்கு வடமத்திய உவா மாகாணங்களில் கன மழை கிடைக்க வாய்ப்புள்ள வடக்கு மாகாணத்தில் சுமார் 600 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 8,9,10 ஆம் திகதிகள் அவதானத்துடன் இருப்பதோடு யாழ்ப்பாணம் 9,10 ,11,12 திகதிகளும் முல்லைத்தீவு 8 ,9 ,10 திகதிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.
தற்போது உருவாகியுள்ள தாழ்வு நிலை புயலாக மாற்றம் பெறாத நிலையில் கிழக்கு மாகாணத்தை அடைந்த நிலையில் புயலாக மாறக்கூடிய தன்மைகள் காணப்படுகிறது.
ஆரம்பத்தில் ஒரு காற்றுச் சுழற்சி வளிமண்டல மேல் சுழற்சியாக மாறும் பின்னர் காற்று சுழற்சி தாழ்வு நிலையாக மாறி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும்.
அதன் பின்னர் நன்கு உணர்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக மாறி பின் புயலாக மாறுவதே வழமையான செயற்பாடு.
காற்றின் வேகம் அதிகரிக்கும்
கிழக்கு மாகாணத்தை ஏற்கனவே வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மணிக்கு ஒன்பது கிலோமீட்டர் என்ற வேகத்தில் நகர்வதன் காரணமாக இன்றைய தினம் 8 ஆம் திகதி வியாழக்கிழமையே கிழக்கு கரையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலில் கிடைக்கப் பெற்ற மழைவீழ்ச்சியை விட அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் காற்றின் வேகம் உள் நிலப்பகுதிகளில் 40-45 கிலோமீட்டர் வேகத்திலும் கரையோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் பாதை வடக்கு மாகாணம் ஊடாக அமையப்பெற்றுள்ளதால் வடக்கின் கரையோர பகுதிகளில் வெள்ள நீர் புகுவதற்கான எதிர் கூறல் விடப்படுகிறது.
கடற்தொழிலாளர்கள் ஒன்பதாம் திகதிக்கு பின்னர் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது ஏனெனில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 4 மணி நேரம் முன்