யாழ்ப்பாண மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
யாழ்ப்பாணம் (Jaffna) உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம் தொடர்பில் பொதுமக்களுக்கு அவரச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் பொதுமக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளது.
இந்த வெப்பக் காலநிலையால் அதிகரிக்கும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கு குளிர் நீர், தோடம்பழம், இளநீர் உள்ளிட்டவற்றை சீனி சேர்க்காது எடுத்துக் கொள்ளுமாறு சுகாதார தரப்பு ஆலோசனை வழங்கியுள்ளது.
பெரியோர் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 2 லீற்றர் நீரை அருந்த வேண்டும் என்றும், அதிக உடல் பருமனுடையவர்கள் 3 லீற்றர் நீரையும், 5 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் ஒன்றரை லீற்றர் நீரையும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு லீற்றர் நீரையும் பருக வேண்டும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாறாக உடலுக்கு தேவையானளவு நீர் பருகுவதை தவிர்த்தால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ஞாபக மறதி போன்ற நோய்கள் ஏற்படும் என்றும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
வாகனங்களில் குழந்தைகள்
அத்துடன், நீண்ட நேரம் வெளியிடங்களில் இருந்து விட்டு மீண்டும் வீடு திரும்பிய பின்னர் குளிர் நீரில் குளித்தல் பொருத்தமானது என்றும், வெளியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் அல்லது சிறுவர்களை நீண்ட நேரம் தனித்து விட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முடிந்தளவு வெளியில் மேற்கொள்ளக் கூடிய செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும், வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது இலகு நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
