தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் : அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவை ஆதரவு
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவை தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தலைவர் பொன் மதிமுகராஜா விஜயகாந்த் இன்றையதினம் (12) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “காங்கேசன்துறை - தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ என்ற விகாரையானது எந்த விதமான அனுமதியும் பெறப்படாமல், மக்களது காணிகளை சட்டவிரோதமாக சுவீகரித்து கட்டப்பட்டுள்ளது.
அநுர அரசாங்கம்
குறித்த காணியானது உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் படையினரின் கட்டுப்பாட்டினுள் இருந்த வேளை இந்த அநாகரிகமான செயல் இடம்பெற்றுள்ளது.
இந்த விகாரையை அகற்றிவிட்டு தமது சொந்த காணிகளை வழங்குமாறு காணியின் உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் முன்னெடுக்கப்படும் போராட்டமானது நியாயமான ஒன்றாகும்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளோடு பதவியேற்றுள்ள அநுர அரசானது விகாரையை சுற்றியுள்ள மக்களின் காணிகளை உடனடியாக வழங்க வேண்டும்.
பூரண ஆதரவு
அதன்பின்னர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, விகாரையை என்ன செய்ய வேண்டும் என விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.
இந்த விகாரை விடயத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் குரல் கொடுப்பது வரவேற்கத்தக்க ஒன்று. உண்மையில் தமிழ் மக்களும் இந்த ஒற்றுமையைத்தான் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தனர்.
எனவே இன்றையதினம் தையிட்டியில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்திற்கு எங்களது பூரண ஆதரவுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |