நாடாளுமன்றில் விசேட உரையாற்றும் ஜனாதிபதி அநுர
புதிய இணைப்பு
சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விசேட உரையாற்ற ஆரம்பித்துள்ளார்.
குறிப்பாக மத்திய கிழக்கு யுத்தம் குறித்தும் அதில் இலங்கையின் நடுநிலை போக்கு தொடர்பிலும் விளக்கியுள்ளதுடன் இலங்கையின் கடல் எல்லையில் தாக்கப்பட்ட ஈரானிய கப்பல் தொடர்பிலும் விளக்கியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு சூழ்நிலைகள் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.
இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு இடமளிக்கும் வகையில் பிரேரணையை முன்வைத்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பிரச்சினை தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே எமது நிலைப்பாடு நடுநிலைமை என்பதாகும். எமது தாய்நாட்டின் கௌரவம், நீதிக்கான கேள்வி மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைமையைப் பேணுவதன் மூலமே எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, எவ்வித அழுத்தங்கள் மத்தியிலும் இந்த நடுநிலைமை நழுவிப்போக இடமளிக்க மாட்டோம். ஆனால், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுவதை நான் அறிவேன்.
நாம் ஏதோ ஒரு தரப்பிற்கு சார்பாக இருக்கிறோம் என்றும், சில தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்கவில்லை என்பது போன்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. அவை முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்பதை உங்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
குறிப்பாக, 2026 பெப்ரவரி 26 ஆம் திகதி ஈரானால் எம்மிடம் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது. மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கைக்கு ஒரு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒத்துழைப்பை மேம்படுத்தும் விஜயமாக இலங்கைக்கு வர விரும்புவதாகவும் எம்மிடம் கோரப்பட்டது.
மார்ச் மாதத்தின் 9 மற்றும் 13 ஆம் திகதிகளில் அந்த அனுமதியை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதே நாள் மாலை ஐக்கிய அமெரிக்கா ஒரு கோரிக்கையை முன்வைத்தது.
தமது நாட்டிற்கு அருகில் உள்ள கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் இலங்கையின் மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரினார்கள்.
எமது மேசை மீது இரண்டு ஆவணங்கள் இருந்தன. ஒன்று ஈரான் விடுத்த கோரிக்கை - மார்ச் 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் தமது கடற்படைக் கப்பல்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியிருந்தது.
மறுபுறம் ஐக்கிய அமெரிக்கா விடுத்த கோரிக்கை - தமது கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர் விமானங்கள் எமது மத்தள விமான நிலையத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியிருந்தது.
நாம் எடுக்க வேண்டிய முடிவு என்ன? நாம் மிகத் தெளிவான ஒரு முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் குறித்த சமிக்ஞைகள் ஏற்கனவே தோன்றியிருந்தன. நாம் அந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. அதுதான் நடுநிலைமை.
நான் இங்கே கேட்கிறேன், ஏன் ஈரானிய கப்பல்களுக்கு அனுமதி வழங்கவில்லை என வினவப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஒருவேளை அனுமதி வழங்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்?
எமது ஒட்டுமொத்த நடுநிலைமையும் நழுவிப்போயிருக்கும். நாம் ஒரு தரப்பிற்குச் சார்பாகச் செயற்பட்டிருப்போம். இல்லையெனில் நாம் மற்றைய தரப்பிற்கும் இடமளிக்க வேண்டியிருந்திருக்கும்.
அவ்வாறு நடந்திருந்தால், எங்கோ தொலைதூரப் பிராந்தியத்தில் உள்ள அந்தப் போர் மோதலானது மத்தள விமான நிலையத்திற்கும் கொழும்புத் துறைமுகத்திற்கும் அருகில் வந்திருக்கும். நாம் அதனைச் செய்யவில்லை. அத்தகைய அழுத்தங்கள் மத்தியிலும் அந்த நடுநிலைமை கொள்கையை பாதுகாத்துள்ளோம்.
மார்ச் 17ஆம் திகதி திறக்கப்பட்ட கேள்விக் கோரலின் அடிப்படையில், ஏப்ரல் 6 அல்லது 7ஆம் திகதிகளில் டீசல் கப்பலும், ஏப்ரல் 16 அல்லது 17ஆம் திகதிகளில் பெட்ரோல் கப்பலும் நாட்டை வந்தடையும்.
அத்துடன் ஏப்ரல் 12 அல்லது 13ஆம் திகதிகளில் மசகு எண்ணெய் கப்பலும், ஏப்ரல் 10 அல்லது 11ஆம் திகதிகளில் விமானங்களுக்கான ஜெட் ஏ-1 (Jet A-1) எரிபொருள் கப்பலும் நாட்டை வந்தடையும் எதிர்பார்க்கின்றோம்” என தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் இன்றைய தினம் நாடாளுமன்றில் இன்னும் சற்று நேரத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இதனைத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதி மட்டத்தில் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இதேவேளை, எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடிக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை அடுத்த மாதம் 10ஆம் திகதி நடத்த, நேற்று (19) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

36 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்தத் தீர்மானத்தை எதிர்க்கட்சி நேற்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |