எரிபொருளை தொடர்ந்து அடுத்தடுத்து உயரவுள்ள பொருட்களின் விலை! இலங்கை மக்களுக்கு ஏற்படப்போகும் சுமை
இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக சந்தைகளில் பால்மாக்களின் விலைகள் மற்றும் கப்பல் கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலையை 350 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலையை 140 ரூபாவாலும் அதிகரிக்க அனுமதியளிக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் கோரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மக்களின் நலனை கருத்திற் கொண்டு பால்மா விலைகளை அதிகரிக்கபோவதில்லை என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும் விலையேற்றம் தொடர்பில் மீண்டும் பரிசீலனை செய்யுமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதேவேளை, நாட்டில் அனைத்து அரிசி வகைகளினதும் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காணப்பட்ட விலையை விடவும், சில அரிசி வகைகளின் விலை 10 ரூபா முதல் 25 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா காலக்கட்டத்தில் வருமானமின்றி மக்கள் அவதிப்படும் இந்த காலக்கட்டத்தில், எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு என்ற செய்தி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.