போதையற்ற நாட்டை உருவாக்க யாழில் அழைப்பு விடுத்த அமைச்சர்
போதையற்ற தாய் நாட்டை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயற்திட்டத்திற்கு வடக்கு மக்கள் கைகோர்க்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (14) இடம்பெற்ற சகல விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான "முழுநாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாவட்ட செயற்பாட்டுக் குழுவினை ஸ்தாபித்தல் நிகழ்வை ஆரம்பித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “போதை அற்ற தாய் நாட்டினை உருவாக்கும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விரிவாக்கத்தை கிராம மட்டங்களில் மேற்கொள்வதே தற்போதைய திட்டமாக காணப்படுகிறது.
விசேட வேலைத்திட்டம்
எதிர்கால சந்ததியினரை போதை அரக்கனிலிருந்து பாதுகாக்கும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தை கிராம மட்டங்களுக்கு விரிவுபடுத்துவதற்கான திட்டத்தினை யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைத்துள்ளோம்.

போதை அற்ற நாட்டினை வெறுமனே பாதுகாப்பு தரப்பினரால் உருவாக்கி விட முடியாது மக்களின் பூரண ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே உருவாக்க முடியும். அதற்காகவே கிராம மட்டங்களில் இருந்து போதைப் பொருளை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் 25 மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும்.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் நாட்டில் புரையோடி இருந்த போதைப்பொருள் கலாசாரம் இன்றும் செயற்பட்டு கொண்டிருக்கிற நிலையில் அதற்கு எதிராக எமது அரசாங்கம் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்தப் போராட்டத்தில் எமக்கு பாரிய சவால்கள் விடப்பட்டன. அரசாங்கம் என்ற வகையில் நாட்டையும் நாட்டு மக்களையும் போதை பொருள் பாவனையில் இருந்து மீட்பதற்காக எத்தகைய சவாலையும் எதிர்நோக்க தயாராக இருக்கிறோம்.
நாளை மறுதினம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் யாழ் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் போதை ஒழிப்பு விசேட வேலைத்திட்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ள நிலையில் அதில் அனைவரையும் பங்கு கொள்ளுமாறு அழைக்கிறேன்.

ஆகவே ஜனாதிபதியின் போதை ஒழிப்பு தேசிய வேலை திட்டத்தை மக்களின் வேலைத்திட்டமாக வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு வடக்கு மக்கள் ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ பவானந்தராஜா, றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, இளங்குமரன், பிரதேச செயலாளர்கள், மதத் தலைவர்கள், சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |