வேலணையில் உருவாகிறது நவீன இறால் வளர்ப்பு பண்ணை – அங்குரார்ப்பணம் செய்து வைத்தார் டக்ளஸ்
நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி - நலிவுற்ற மக்களின் மீள் எழுச்சி' எனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தின் அடிப்படையில், வேலணையில் இரண்டு பண்ணை வளர்ப்புத் திடடங்களுக்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ன.
அதனடிப்படையில், அன்னை குழுமம் எனும் தனியார் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் நவீன இறால் வளர்ப்பு பண்ணைக்கான வேலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு இன்று வேலணை வடகிழக்கு ஜே/13 கிராம உத்தியோகத்தர் பிரிவில் அன்னை குழுமத்தின் பண்ணைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நடைபெற்றது.
வேலணை கிராமத்தில் அன்னை குழுமத்தினால் ஆரம்பிக்கப்படுகின்ற இந்த நவீன இறால் பண்ணை இப்பகுதியின் வளர்ச்சிக்கும் மக்களது எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றவகையில் வேலணை பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவதோடு வருமானத்தின் ஒரு பகுதியை இப்பிரதேசத்திற்காக பயன்படுத்த குறித்த நிறுவனம் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.
அத்துடன் மக்களினதும் பிரதேசங்களினதும் நலன்களை முன்னிறுத்தி தான் முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்துக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் எப்பொழுதும் முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்காக அவர்களுக்கு தனது மக்கள் சார்பாக நன்றி கூறுவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் இப்பிரதேசத்தின் பலரது ஒத்துழைப்புகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி திட்டத்தை குறித்த நிறுவனம் தனக்குள்ள அனுபவத்தையும் பொருளாதார வளத்தையும் கொண்டு சிறப்பாக முன்னெடுக்கும் என்றும் தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே மற்றுமொரு நிகழ்வாக Ocean aqua farm நிறுவனத்தினால் வேலணை கிராமத்தில் உருவாக்கப்படவுள்ள நண்டு வளர்ப்பு பண்ணைக்கான வேலைகளையும் இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


