இன்னும் ஐந்து நாட்களில் நாட்டில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!
அனைத்து வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட புதிய கட்டமைப்பு இம்மாதம் 07ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக கூறிய இராஜாங்க அமைச்சர், இந்தப் பொறிமுறையின் ஊடாக வீட்டிலிருந்தவாறே மக்களுக்கு வாகன வருமான வரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் : ஜனக ரத்நாயக்க கோரிக்கை
டிஜிட்டல் மயமாக்கல்
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்நாட்டில் அரச சேவையின் வினைத்திறனை மேம்படுத்தவும் முறைகேடுகளைகத் தடுக்கவும் அரச சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்.
எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்திய அதிபர் ரணில் விக்ரமசிங்க, 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையின் போது அனைத்து அரச நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள், மாநகர சபைகள், மாவட்டச் செயலகங்கள் உள்ளிட்ட ஒன்பது வகையான அரச நிறுவனங்களைத் தெரிவுசெய்து, அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் வகையில் ஒன்பது முன்னோடி வேலைத் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மேலும், எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் ஒன்லைன் முறையில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய 08 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.