ஹெக் செய்யப்பட்ட கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம்: விசாரணைகள் தீவிரம்
சிறிலங்கா கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் இனந்தெரியாத நபரொருவரால் ஊடுருவப்பட்டுள்ளமை(hacked) தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியவை ஒன்றிணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் நேற்றைய தினம் இனந்தெரியாத நபரொருவால் ஊடுருவப்பட்டது.
உத்தியோகப்பூர்வ இணையத்தளம்
அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி குறித்த நபர் இந்த ஊடுருவல் நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் இணையத்தளத்தின் முகப்பில் பதிவிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், தனது பெயர் Anonymous EEE எனவும் தான் உயர்தரக்கல்வி கற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் இணையதளத்தை ஊடுருவியமைக்கு மன்னிப்பு கோரிய அவர், குறித்த இணையதளத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் இலங்கைப் பிரஜை என்ற வகையில் நாட்டின் பாதுகாப்பிற்காக இதனைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
விசாரணைகள்
இந்த நிலையில், கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஊடுருவப்பட்டமை தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், இணையத்தள பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்த சிறிலங்கா கல்வி அமைச்சு, உத்தியோகபூர்வ இணையத்தளத்தை கூடிய விரைவில் மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |