ஆறு மாத கைக்குழந்தையை முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்ற தாய்!
காலி அம்பலாங்கொடை பகுதியில் தாயொருவர் தனது 9 வயது மகனையும் 6 மாத கைக்குழந்தையையும் முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (12) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருவர் தம்மிடம் வந்து 2 பிள்ளைகளை கொடுத்து சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு கூறிச் சென்றதாகவும் நீண்ட நேரமாகியும் குறித்த பெண் திரும்பி வராததால் பிள்ளைகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க தாம் வந்ததாகவும் குறித்த முச்சக்கரவண்டி சாரதி காவல்துறையினரிடம் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைக்கு அடிமையான தாய்
இதனையடுத்து விசாரணை நடத்திய அம்பலாங்கொடை காவல்துறையினர் தாய்ப்பாலின்றி நோய்வாய்ப்பட்டிருந்த 6 மாத கைக்குழந்தையை பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், குறித்த 2 பிள்ளைகளையும் நேற்று (13) நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாகவும் அவர்களை சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த தாய் போதைப் பொருளுக்கு அடிமையானவர் எனவும் அவரை உடனடியாக கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அம்பலாங்கொடை காவல்துறையினர் கூறியுள்ளனர்.
