காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வை வழங்காத இலங்கையின் ஜனாதிபதிகள்
இலங்கையின் ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் காணாமல் போன எம் உறவுகளுக்கான நீதியை கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இதுவரையில் எந்த ஜனாதிபதியும் எமக்கான பதிலை வழங்கவில்லை என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நாங்கள் வீதியில் நின்று போராடி வருகிறோம். ஆனால் எங்களை யாருமே திரும்பி பார்ப்பதாக தெரியவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மன்னார் (Mannar)மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் இன்றைய தினம் (28) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
கவனயீர்ப்பு போராட்டம்
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளோம்.
இலங்கை அரசாங்கமும் சரி சர்வதேசமும் எங்களை ஒரு தடவையாவது திரும்பி பார்க்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மாத முடிவில் வடக்கு கிழக்கில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வீதியில் நின்று போராடி வருகிறோம். ஆனால் எங்களை ஒருவருமே திரும்பி பார்ப்பதாக தெரியவில்லை. எனினும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வீதியில் இறங்கி போராடி வருகிறோம்.
ஆனால் நீதிக்காக ஏங்கி போராடி வருகின்ற அம்மாக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் சாட்சிகளும் மறைக்கப்பட்டு கொண்டு செல்கிறது. அதனையே இந்த அரசும் விரும்புகின்றது.
ஜனாதிபதி தேர்தல்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை (OMP) மாவட்ட ரீதியாக ஸ்தாபித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு 2 இலட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறுகின்றனர். எமது உறவுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த அரசு இந்த பணத்தை வழங்குகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஊடாக உண்மையை கண்டறிவோம் என கூறப்பட்டுள்ள போதும் இதுவரை உண்மையை கண்டறிய முன் வரவில்லை. ஆனால் இழப்பீடு வழங்குவதற்காக மாத்திரம் முன்னுக்கு வருகின்றனர்.
நாங்கள் நஷ்டஈட்டை பெற்றுக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டும் என்பதே ஓ.எம்.பியின் நோக்கமாக உள்ளது. எமது பிள்ளையின் உயிர் 2 லட்சம் பெறுமதி இல்லை. எங்கள் பிள்ளைகளை திருப்பி தந்தால் 4 இலட்சம் எங்களால் தர முடியும். உயிருடன் ஒப்படைத்த பிள்ளைகளையே கேட்கிறோம்.
தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெற உள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு தற்போதைய ஜனாதிபதியினால் தீர்வு தர முடியுமா, நாட்டில் தெரிவு செய்யப்படுகின்ற ஒவ்வொரு ஜனாதிபதியிடமும் காணாமல் போன எம் உறவுகளுக்கான நீதியை கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
சர்வதேச விசாரணை
நேரடியாக சென்று சந்தித்து கலந்துரையாடியும் உள்ளோம். ஆனால் இது வரையில் எந்த ஜனாதிபதியும் எமக்கான பதிலை வழங்கவில்லை. தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதியாக வந்தால் காணாமல் ஆக்கப்பட்ட எம் பிள்ளைகளையும்,உறவுகளையும் மீட்டுத் தருவாரா, அல்லது எமது உறவுகளுக்கு நீதி கிடைக்குமா, அல்லது இருக்கின்ற இடத்தை கண்டுபிடித்து தருவாரா, அந்த எதிர்பார்ப்புக்கள் உடனே இன்றுவரை போராடி வருகிறோம்.
இலங்கை அரசியலில் நம்பிக்கை இல்லை.இவ்வாறான காரணங்களினாலேயே சர்வதேச விசாரணை கோரி போராட்டம் முன்னெடுத்து வருகிறோம்.“ என தெரிவித்தார்.
இதேவேளை பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |