மாயமான ஜனாதிபதி செயலக வாகனங்கள்: நீதிமன்றுக்கு சி.ஐ.டி விடுத்த அறிவிப்பு
ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்கள் காணாமல் போனது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலாளரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த அறிவிப்பு நீதிமன்றுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக கூடுதல் செயலாளரிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், மாயமான 29 வாகனங்களில் பதினாறு வாகனங்களை கடைசியாகப் பயன்படுத்தியவர்களின் விவரங்கள் தங்களிடம் உள்ளதாகவும், அவற்றில் பதின்மூன்று வாகனங்கள் குறித்து எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணை
அத்தோடு, இந்த வாகனங்கள் தொடர்பான தகவல்களை ஒன்பது மாகாணங்களில் உள்ளூராட்சி நிறுவனங்களிடமிருந்து கோரியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு கூறியுள்ளது.
அதன்படி, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதுடன், மேலும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தெரிவிக்க வழக்கை மார்ச் 12 ஆம் திகதி அழைக்க உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |