வவுனியாவில் இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசியை திருடியவர் கைது
வவுனியா நகரப் பகுதியில் கைத்தொலைபேசி திருடி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பழைய பேருந்நு நிலையப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனம் ஒன்றில் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி ஒன்று திருட்டுப் போயுள்ளது என்று வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டையடுத்து தலைமை காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி ஜெயக் கொடியின் வழிகாட்டலில், குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஜயத்திலக தலைமையில் உப காவல்துறை பரிசோதகர் அஹமட், காவல்துறை சார்ஜன் திஸாநாயக்கா, காவல்துறை கான்ஸ்டபிள்களான உபாலி, தயாளன், ரணில் ஆகியோர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
காவல்துறையினரால் கைது
இதன்போது குறித்த கைத்தொலைபேசி நகரப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதுடன் அந்தக் கைத்தொலைபேசியை திருடி விற்ற நபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.
மேலும், மீட்கப்பட்ட கைத்தொலைபேசியையும், கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |