யாழில் சடலங்களை வைத்து பணம் சம்பாதிக்கும் அரச அதிகாரிகள் : குற்றச்சாட்டும் பொதுமக்கள்
யாழில் (Jaffna) உள்ள ஒரு சில பெண் மற்றும் ஆண் மரண விசாரணை அதிகாரிகள், மரணத்தில் இலஞ்சம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரான்ஸுக்கு (France) அனுப்புவதாகத் தெரிவித்து, பணமோசடியில் ஈடுபட்ட மரண விசாரணை அதிகாரியொருவர் பருத்தித்துறையில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டார்.
15 இலட்சம் ரூபா மோசடி செய்தார் என்று அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் (Goonarojan) தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் மேற்படி மரண விசாரணை அதிகாரியை கைது செய்தனர்.
உடற்கூற்று பரிசோதனை
இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஒரு தொகைப் பணத்தைத் திரும்ப வழங்கியதைத் தொடர்ந்து அவரைப் பிணையில் நீதிமன்றம் விடுவித்தது.
இது இவ்வாறு இருக்கையில் யாழில் உள்ள ஒரு சில பெண் மற்றும் ஆண் மரண விசாரணை அதிகாரிகள் மரணத்தில் இலஞ்சம் தேடும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
இறந்த உடலங்கள் மீது விரைவாக மரண விசாரணைகளையும், உடற்கூற்று பரிசோதனைகளையும் எதிர்பார்த்து மக்களும் இலஞ்சம் வழங்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.
மரண விசாரணை
தவறான முடிவெடுத்து இறப்பவர்களின் மரண விசாரணைகளை மேற்கொள்ளும் போது, அந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குறித்த மரண விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கும் போது, மக்களும் வேறு வழியின்றி இலஞ்சம் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்படுகின்றனர்.
அத்தோடு, இறப்பு சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான சம்பவம் ஒன்று அண்மையில் கூட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) இடம்பெற்றுள்ளதாகவும் மற்றும் மேலிடங்களுக்கு முறைப்பாடு வழங்கியும் எந்தவிதமான பிரயோசனமும் கிடைக்கவில்லை என அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |